
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்தி வாசன்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனுக்கு அவரது பெற்றோர் அதே பகுதியில் இருக்கும் நடுவனூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டுள்ளனர். திடீரென சிறுவனுக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது மகனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மார்ச் 25-ஆம் தேதி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் . இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தவறான ஊசியால் சிறுவன் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தனியார் நிறுவன உரிமையாளர் செந்தில் குமாரை ஆத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மருந்தகத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.