மைதானத்தில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் தனது நகைச்சுவையான பதிவுகளால் ரசிகர்களை மகிழ்விக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது புஜாராவைக் கிண்டல் செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மெய்சிலிர்த்தார்.

வர்ணனை அறையில் இருந்த அவர், எழுந்து நின்று இந்த இளம் வீரர்களுக்கு தனது ‘சல்யூட்’ (Salute) மரியாதையைச் செலுத்தினார். “15 வயதில் இத்தகைய ஆதிக்கம் செலுத்துவது சாதாரணமான விஷயம் அல்ல; வைபவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் எனது சல்யூட்” என அவர் நெகிழ்ந்து கூறினார்.

ஹர்பஜன் சிங் சல்யூட் அடித்தபோது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் புஜாரா மட்டும் சல்யூட் அடிக்காமல், ஒருவிதத் தயக்கத்துடன் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார். இந்த வீடியோவைச் சமூக வலைதளத்தில் பார்த்த அஸ்வின், புஜாராவைச் சும்மா விடவில்லை.

“என் சார்பாகவும் வைபவ்வுக்கு ஒரு சல்யூட்.. ஆனால், எனது ஆருயிர் நண்பர் புஜாரா மட்டும் சரியாகச் சல்யூட் செய்யவில்லை” எனச் சிரிக்கும் எமோஜிகளுடன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு புஜாராவைக் கிண்டல் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக விளையாடும் புஜாரா, டி20 கிரிக்கெட்டின் இந்த அதிரடி கொண்டாட்டங்களை உள்வாங்குவதில் தடுமாறுவதை அஸ்வின் விளையாட்டாகக் கலாய்த்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. வெறும் 2.4 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. இது ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது அதிவேக 50 ரன்கள் என்ற சாதனையாகப் பதிவானது.

இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்களும், வைபவ் 14 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இவர்களின் அதிரடியால் 11 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 150 ரன்களைக் குவித்து, மும்பையை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மைதானத்தில் உள்ள வீரர்களை மட்டுமல்லாது, வர்ணனை அறையில் உள்ள ஜாம்பவான்களையும் வியக்க வைத்துள்ளது.