தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறும் விவகாரங்கள் அவ்வப்போது பேசுபொருளாக மாறி வரும் நிலையில், தற்போது கோவில்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியர்கள் காட்டியுள்ள புதிய கெடுபிடி மது பிரியர்களை கடும் அதிர்ச்சியிலும் புலம்பலிலும் ஆழ்த்தியுள்ளது.
அதாவது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையாக 10 ரூபாய் பெறப்பட்டு, காலி பாட்டிலை திருப்பிக் கொடுக்கும்போது அந்தப் பணம் திருப்பி அளிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் புதுவிதமான கண்டிஷனைப் போட்டுள்ளனர். அதன்படி, ஒரு பாட்டிலை மட்டும் கொண்டு வந்து கொடுத்தால் அதற்குரிய 10 ரூபாயைத் திரும்பத் தர முடியாது என்றும், ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 5 பாட்டில்களைக் கொண்டு வந்தால் மட்டுமே அந்தப் பணத்தைத் திருப்பித் தர முடியும் என்றும் கறார் காட்டியுள்ளனர்.
ஐந்து பாட்டில்களை ஒரே நேரத்தில் குடித்தால் செ**துபோகமாட்டோமா..? வீட்டில் மனைவி திட்டமாட்டாங்களா..? பேசாம கடையை மூடுங்க .. நாங்க வரமாட்டோம்..! ஒரு பாட்டில் கொண்டு வந்தால் பணம் திரும்ப தரமாட்டோம்.. 5 பாட்டில் கொண்டு வந்தால் தான் பணம் திருப்பி தருவோம்..! டாஸ்மார்க் கடையில் ஊழியர்கள்… pic.twitter.com/yX6gllaihd
— Polimer News (@polimernews) September 5, 2026
ஊழியர்களின் இந்த அதிரடியான உத்தரவைக் கேட்டதும் அதிர்ந்துபோன மதுபிரியர்கள், “தினமும் வந்து ஒரு பாட்டில் வாங்குபவர்களால் எப்படி ஒரே நேரத்தில் 5 பாட்டில்களைச் சேகரித்து கொண்டு வர முடியும்? ஒருநாளைக்கு 5 மதுபாட்டில்களை வாங்கி குடிக்க முடியுமா?” வீட்டில் மனைவி திட்ட மாட்டாங்களா, பேசாம கடையை மூடுங்க. நாங்க வரவே மாட்டோம் என்று புலம்பித் தவித்து வருகின்றனர்.
ஒரு பாட்டிலைக் கொடுத்தாலும் அதற்குரிய தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற விதியை மீறி, ஊழியர்கள் தங்களுக்குத் தோதான முறையில் இப்படி கட்டுப்பாடுகளை விதிப்பது அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடை ஊழியர்களுக்கும் மது வாங்குபவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
