மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்தனர். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் வடிவேலுவை சாதி ரீதியாக ஒடுக்கும் மாவட்டச் செயலாளர் கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடித்திருப்பார். இதனிடையே தனபால் எம்எல்ஏவாக இருந்தபோது சேலத்தில் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். எனவே இந்த திரைப்படத்துடன் எடப்பாடியை இணைத்தும் கருத்துக்களும் விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியிடம், இந்த படம் உண்மை கதைன்னு சொல்றாங்களே என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த அவர், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. அதனால் அது பற்றி கருத்து கூற முடியாது. அவர்கள் வேறு இயக்கம் நாங்கள் வேறு இயக்கம். எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் படத்தை வந்து பார்த்திருப்பேன் நான் அந்த படத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.