
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது. இதுவரை சிஎஸ்கே விளையாடிய 4 தொடர்களில் மும்பைக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று போட்டியை பார்ப்பதற்காக தோனியின் பெற்றோர் மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். இதன் காரணமாக தோனி ஓய்வு முடிவை அறிவிக்க போகிறார் என்று சமூக வலைதளத்தில் செய்தி தீயாக பரவியது. கடந்த சில வருடங்களாகவே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர் இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் என்று தெளிவு படுத்திவிட்டார்.
இருப்பினும் நேற்று சமூக வலைதளத்தில் தோனியின் ஓய்வு குறித்து மீண்டும் பரவலாக பேசப்பட்டதால் தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு தோனியின் ஓய்வு பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது வலுவாக இருக்கிறார். இதனால் இப்போதெல்லாம் நான் தோனியின் ஓய்வு குறித்த முடிவுகளை கேட்பதில்லை என்றார். மேலும் இதனால் தோனி ஓய்வு முடிவை அறிவிக்க மாட்டார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.