Swiggy மற்றும் zomato உள்ளிட்ட செயலிகளின் டெலிவரி ஏஜெண்டுகளின் மாத வருமானம் குறித்து யூடியூபர் ஒருவர் நடத்திய ஆய்வில் ஆச்சரியப்படும் தகவல்கள் பல வெளிவந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி பலர் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த பட்டதாரிகள் கூட கூடுதல் வருமானத்திற்காக வேலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு டெலிவரி துறை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், swiggy மற்றும் Zomato நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் குறைந்த சம்பளம் மற்றும் சவாலான வேலைச்சுமை குறித்து கவலை தெரிவித்து வந்தனர்.

ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அதற்கு நேர்மறையான முடிவுகளை காட்டுகின்றன. அதன்படி Full Disclosure என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த யூடியூபர் இரு நிறுவனங்களின் டெலிவரி செய்யும் நபர்களிடம் அவர்களது வருமானம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ச்சியாக கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கான பதில்களை முறையாக அளித்திருந்தனர். அவர்களின் கூற்றுப்படி, தற்போது அவர்கள் மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கின்றனர், இது ஐடி துறை ஊழியர்களின் சராசரி மாத வருமானத்தை விட அதிகமாகும். அதிலும் ஊழியர் ஒருவர் இந்த பணியில் ஆறு மாதங்களில் ரூ.2 லட்சம் வரை சேமிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.