விராட் மற்றும் ரோஹித்துக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு தேவை என்று கூறியதால் தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. 

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்று ஊடக அறிக்கைகள் கூறியிருந்தன, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் வழங்கப்படவில்லை. ஏன் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

அதாவது, இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன், ரோஹித் மற்றும் விராட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒரு செய்திக்குறிப்பில், விராட் மற்றும் ரோஹித்துக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு தேவை என்று அவர்கள் கூறியதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, இருவருக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்தது. இந்த 2 பேட்ஸ்மேன்களும் நேரடியாக தென்னாப்பிரிக்க  டெஸ்ட் தொடரில் மீண்டும் வருவதைக் காணலாம். இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல கே.எல் ராகுலிடம் ஒருநாள் போட்டிக்கான பொறுப்பும், சூர்யகுமார் யாதவிடம் டி20 அணிக்கான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டி-20 உலகக் கோப்பையில் ரோஹித் கேப்டனா?

இந்திய அணியின் முழு கவனமும் இனி டி20 உலகக் கோப்பைப் போட்டியில்தான் இருக்கும். இந்த போட்டியிலும் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுபவம் வாய்ந்த வீரராக விராட் கோலியும் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு இந்திய அணி ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட களம் இறங்கவுள்ளது. இந்த தொடரில் விராட் மற்றும் ரோஹித் மீண்டும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.. 2024 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணிக்கு இது கடைசி டி20 தொடராகும். அதன் பிறகு 2024 ஐபிஎல்  போட்டிகள் தொடங்கும். ஐபிஎல் 2024 இல் வீரர்களின் செயல்பாடுகளையும் பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து, அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கலாம்..