உதய்பூர் நகரத்தில் வியாபாரிகள் கடைகள் மூடியது பெரிய  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு உதய்பூர் பகுதியில் ஒரு சந்தையில் எலுமிச்சை விலையை உயர்த்தியதால் வியாபாரிகள் மீது மர்ம குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சில கடைகள் சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காய்கறி வியாபாரிகள் தந்தா மண்டி, நேரு பஜார், நடா காடா, டெல்லி கேட் கிராசிங் மற்றும் பாபு பஜார் உள்ளிட்ட முக்கிய சந்தைகளை தற்காலிகமாக மூடினர்.

சம்பவத்தையடுத்து வியாபாரிகள் கூட்டமாக திரண்டு ஆத்திரத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து மக்களும் பெரும் கோபத்தில் அங்கு வந்தனர்.

இந்த பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க போலீசார் களத்தில் இறங்கி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற்பகுதியில் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டன. உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் கோயல் தெரிவித்ததன்படி, இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நகரம் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிர ரோந்து மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.