நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளன. குறிப்பாக போடேகோஷி மற்றும் திரிசூலி நதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு பல கிராமங்களை அடித்துச் சென்றது. வீடுகள், சாலைகள், பாலங்கள் என பல கட்டமைப்புகள் வெள்ளத்தில் சிக்கி மாயமான நிலையில், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் உறவினர்களைத் தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரஸுவா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சமீர் தாமாங்கின் குடும்பக் கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீர் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீட்டில் இருந்த அவரது 13 வயது சகோதரி பிரியா மற்றும் 7 வயது சகோதரி பார்வதி ஆகிய இருவரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இளைய சகோதரிக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றும், அவரை கவனித்துக்கொள்வதற்காக மூத்த சகோதரியும் வீட்டிலேயே இருந்ததாக சமீர் தெரிவித்துள்ளார். வெள்ளம் திடீரென வீட்டை அடித்துச் சென்ற நிலையில், இரு சகோதரிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. “எனது சகோதரிகள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்; ஒரே நொடியில் அவர்களை வெள்ளம் என்னிடமிருந்து பிரித்துவிட்டது” என சமீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ரஸுவா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சு தாமாங்கும் இந்த பேரழிவில் தனது குடும்பத்தின் பலரை இழந்துள்ளார். அவரது தாய், சகோதரர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 வயது ஆகாஷ் தாமாங்கின் சகோதரர் மற்றும் சகோதரியும் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். உயிர் பிழைத்த குழந்தைகள் பலர் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் மற்றும் சகோதரர்களை இழந்த நிலையில், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, காணாமல் போனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதும் நேபாளத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ரஸுவாவைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மற்றும் 4 வயது மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களைத் தேடிய உறவினர்களுக்கு சில நாள்களுக்குப் பிறகு மனித உடல் பகுதி ஒன்று கிடைத்துள்ளது. அது ராஜ்குமாருடையதா என்பதை உறுதி செய்ய அவரது சகோதரர் அம்ரித் தியாலி டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரியை அனுப்பியுள்ளார். வெள்ளத்தில் உடல்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் முகம், உடைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அடையாளம் காண முடியாத சூழலில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு டிஎன்ஏ பரிசோதனையே தற்போது முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.