உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குருகிராமில் பணியாற்றும் தலைமைக் காவலர் ராகுல் குமார், விவாகரத்து செய்யாமல் 5 பெண்களைத் திருமணம் செய்ததுடன், 6-வது முறையாக திருமணத்திற்கு தயாராகி வருவதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பரேலியில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றும் அந்தப் பெண், தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்தப் பெண் தனது புகாரில் கூறியதாவது, “திருமணமாகிய சில நாள்களிலேயே ராகுல் தினமும் குடித்துவிட்டு என்னை அடிக்கத் தொடங்கினார். இதனால் மூன்று மாத கர்ப்பகாலத்தில் நான் குழந்தையையும் இழந்தேன்.

அவருக்கு ஏற்கனவே 4 பெண்களுடன் திருமணம் ஆனதும், அவர்களை விவாகரத்து செய்யாமல் என்னை திருமணம் செய்ததும் சமீபத்தில் தான் தெரியவந்தது. தற்போது முசாபர்நகரைச் சேர்ந்த வேறு ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பரேலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். “பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்தக் குடும்பம் விமானப்படை மற்றும் ராணுவ பின்புலம் கொண்டவை. இந்த வழக்கு உண்மையை அடையாளம் காணத் தேவையான அனைத்து சாட்சிகளும் சேகரிக்கப்படும்” என காவல்துறை அதிகாரி வினய் குமார் உறுதியளித்துள்ளார்.