முன்னாள் பீகார் மந்திரியும், ஆர்ஜேடி கட்சி தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ், ஹோலி பண்டிகையின் போது தலைக்கவசம் அணியாமல் பாட்னா நகரில் ஸ்கூட்டியில் சென்றதால் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் இல்லம் அருகே வாகன ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியானது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேஜ் பிரதாப், தலைக்கவசமில்லாமல் ஸ்கூட்டியில் நகரமெங்கும் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் வீட்டிற்குச் சென்று, “பல்டு சாசா எங்கே?” என சத்தமாக கேட்டிருப்பது பதிவாகியுள்ளது. ‘பல்டு’ என்ற சொல், ஒருவர் அரசியல் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதை குறிப்பிடுகிறது. அவருடன் இருந்த ஆதரவாளர்கள் கூடவே வாகனங்களில் அவர் பின்னே சென்று முழக்கங்களை எழுப்பினர்.

தேஜ் பிரதாப் யாதவின் மற்றொரு வீடியோவில், அவர் ஒரு காவலரை அவரது பாடலுக்கு நடனம் ஆடும்படி கட்டாயப்படுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஏய், ஒரு பாடல் போடுகிறேன், அதில் நீ நடனமாட வேண்டும், இல்லையென்றால் சஸ்பெண்ட்” என்று அவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த காவலர் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகள் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.