
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் மசோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்பூர் மஜ்ரா பாரதிபூர் கிராமத்தில், 25 வயதான ஷில்பி யாதவ் என்ற இளம்பெண், தனது திருமண நாளன்று காதலனுடன் இணைந்து தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷில்பியின் திருமணம் மே 5ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் திருமண ஊர்வலம் வீட்டை வந்தபோது, அவர் தனது காதலன் பானு சிங்குடன் வீடைவிட்டு ஓடினார்.
அன்று இரவிலேயே கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மாமரத்தில், இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தனர். இச்சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஷில்பி மற்றும் பானு இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்தில் போலீசார் ஒரு மூன்று பக்க தற்கொலைக் குறிப்பை மீட்டனர். இதில் ஷில்பி, “நான் பானுவை உண்மையாகவே காதலிக்கிறேன். அவன் இல்லாமல் வாழ்க்கையை நீடிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்தேன். இதில் எங்கள் குடும்பங்கள் எதுவும் குற்றவாளிகள் அல்ல” என எழுதியுள்ளார். தனது காதலனைத் தவிர வேறு யாரையும் வாழ்க்கையில் ஏற்க முடியாது என்பதையும், ஒரே நேரத்தில் இருவரும் உயிர் தியாகம் செய்ய முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசோலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். தற்கொலைக் குறிப்பு தடயவியல் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு குடும்பங்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதல் தோல்வியால் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.