
2025 மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் (UAE) மகளிர் அணி புதிய சரித்திரத்தை படைத்துள்ளது. ஒரே போட்டியில், அணி பேட்டிங் செய்தபோது, 10 வீராங்கனைகள் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி’ குழுவில் உள்ள UAE அணி, மே 10-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கத்தார் மகளிர் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த UAE அணி, தனது திறமையான தொடக்க ஜோடிகள் ஈஷா ரோஹித் ஓசா (113 ரன் – 55 பந்துகள்) மற்றும் தீர்த்தா சதீஷ் (74 ரன் – 42 பந்துகள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் இழக்காமல் 192 ரன்கள் குவித்தது.
பாங்காக்கில் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு இருந்ததால், போட்டி நிறுத்தப்பட்டால், இரு அணிகளும் ஒரு புள்ளி மட்டுமே பெற நேரிடும் நிலை உருவாகலாம் என்ற அச்சத்தில் UAE அணியினர் ஒரு புத்திசாலியான யுக்தியை கடைபிடித்தனர். டி20 போட்டிகளில் டெஸ்ட் போட்டியைப் போல டிக்ளரேஷன் என்ற அம்சம் இல்லாததால், வீராங்கனைகள் ஒருவர் பந்தை சந்திக்காமலே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனதாகக் கூறி, அம்பயரிடம் தெரிவித்து வெளியேறினர்.
இதனடிப்படையில் 8 வீராங்கனைகள் ரன் எதுவும் எடுக்காமல், ஒரு பந்தையும் சந்திக்காமல் வெளியேற, மற்ற இருவர் ஓட்டங்களுடன் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனார்கள். இதன் மூலம் 10 பேட்டர்கள் க்ரீஸிலிருந்து வெளியேற, UAE அணி தங்களது இன்னிங்ஸை 16 ஓவரிலேயே முடித்து போட்டியை முடிக்க ஏற்பாடு செய்தது.
பின்னர் பந்து வீச்சில் UAE அணி அபாரமாக செயல்பட்டது. கத்தார் மகளிர் அணி 11.1 ஓவர்களில் 29 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. UAE பவுலர்கள் மிசெல்லே போத்தா, கேட்டி தாம்சன் ஆகியோர் சிறப்பாக விளங்கினர்.
இந்த நடவடிக்கை கிரிக்கெட் விதிகளை மீறாதது என்பதோடு, அணியின் சிந்தனையுடன் கூடிய திட்டமிடலின் விளைவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த யுக்தி மூலம் UAE அணி மழையால் போட்டி பாதிக்கப்படாமல் இரு புள்ளிகளையும் உறுதிசெய்தது மட்டுமல்லாமல், தங்களது நெட் ரன் ரேட்டையும் (6.998) பெரிதும் உயர்த்தியுள்ளது.
இச்சம்பவம், உலக கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த விவாதத்தையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான புதுமையான யுக்தி மூலம் வெற்றி பெறும் அணிகளை எதிர்காலத்தில் நாம் அதிகம் காண நேரிடலாம்.