மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். 1923 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் என்டி ராமராவ். தெலுங்கில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை துவங்கி ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் ராமராவின் நூற்றாண்டு விழாவையொட்டி தலைநகர் புது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விழா நடந்தது. இதில் முக்கிய குடும்ப உறுப்பினர்களும் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசத்தின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ராமராவ் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார். நாணயத்தின் ஒருபுறம் அசோக சின்னம் மறுபுறம் என்டி ராமராவ் உருவத்துடன் நந்தமுறி தாரக ராமாராவ் ஜெயந்தி வாசகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.