மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள பவாய் பகுதியில் தனியார் பாதுகாப்பு காவலர் ஒருவர் மராத்தி மொழி பேசத் தெரியவில்லை என்பதற்காக, மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வீடியோவில், காவலர் ஒருவரை MNS தொண்டர்கள் அறைந்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட காவலர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் மராத்தி மொழி பேசத் தெரியவில்லை என விளக்கினார். சமீபமாக மராத்தி பேசத் தெரியாதவர்கள் மீது MNS தொண்டர்களால் தாக்குதல் நடப்பது வழக்கமாகி வருகிறது என கூறப்படுகிறது.


கடந்த மாதம் வெர்சோவா பகுதியில் உள்ள டி-மார்ட் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், “நான் மராத்தி பேச மாட்டேன், என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க” என கூறியதற்காக தாக்கப்பட்டார். இதற்குப் பதிலளித்த MNS கட்சியின் பேச்சாளர் வகீஷ் சரஸ்வத், “மராத்தி மொழிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.

அது மாநிலத்தின் அடையாளம். இதை அவமதிப்பவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக சில நேரங்களில் வன்முறை ஏற்படுகிறது, ஆனால் அது திட்டமிட்டதல்ல,” என தெரிவித்தார். இது குறித்து எல்ஜேபி எம்.பி ராஜேஷ் வர்மா, “இந்தி பேசும் மக்களை அரசியல் சக்திக்காக குறிவைக்கிறார்கள்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.