
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில், 22 வயதான வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணியம் நகரை சேர்ந்த கார் டிரைவர் சரவணனின் மகனான ஜெமினி, தனது நண்பர் சுனில் உட்பட சிலருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இவர்களுக்கு போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
கடந்த 23-ம் தேதி சுனில் ஜெமினியை போதை ஊசி செலுத்த அழைத்த போது, ஜெமினி மறுத்ததால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 28-ம் தேதி மாலை சுனில் தனது நண்பர்களான கார்த்திக், அருண்குமார், திலீப்குமார் மற்றும் பெங்களூரான் ஆகியோருடன் ஜெமினியை மீண்டும் அழைத்துச் சென்றார்.
ஜெமினி 2 நாட்கள் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். விசாரணையின் போது ஜெமினி மற்றும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு நீரோடை பகுதிக்கு சென்று போதை ஊசி போட முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக்கி, பின்னர் சுனில் கத்தியால் ஜெமினியை குத்தி கொன்றார்.
இந்தக் கொலைக்குப் பிறகு, ஜெமினியின் சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுற்றி, புளியரம்பாக்கம் ஏரியில் வீசிவிட்டு அனைத்து குற்றவாளிகளும் தப்பியோடியுள்ளனர். போலீசார் நேற்று சுனில் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அழைத்து சென்று, சடலத்தை கண்டறிந்தனர்.
சடலம் அழுகிய நிலையில் ஏரியில் மிதந்தது, அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது சுனில் மற்றும் கார்த்திக் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான அருண்குமார், திலீப்குமார் மற்றும் பெங்களூரான் ஆகிய மூவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.