சென்னையின் கொடுங்கையூர் பகுதியில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூலக்கடையை சேர்ந்த பால் யூட்டி கிளாஸ் (வயது 20) என்ற இளைஞர், தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக செல்போனில் அதிக நேரம் செலவழித்து தூக்கமின்றி இருந்ததாகவும், இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, அவர் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று மதியம் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் மயங்கி கிடந்த மாணவரை பெற்றோர் மீட்பு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாணவர் சோடியம் நைட்ரேட் கலந்த ஊசியை செலுத்தி தற்கொலைக்கு முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார், இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.