
திருச்சி மாவட்டத்திலுள்ள ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மின்மாற்றியை மாற்றி அமைக்க கோரி கே.கே நகர் மின்வாரியம் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் 11 கே.வி உயர் மின்னழுத்த கம்பத்திலிருந்து மின்மாற்றிக்கு வரும் மின் கம்பியை துண்டிப்பதற்கான பணியில் ஒப்பந்த பணியாளர்களான கலாமணி(42), மாணிக்கம்(33) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதலில் கலாமணி மின்கம்பத்தில் ஏறினார். மாணிக்கம் கீழே நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மின் கம்பியை துண்டிக்க முயன்ற மின்சாரம் பாய்ந்து கலாமணி மின்கம்பத்தில் தொங்கியபடியே உடல் கருகி உயிரிழந்தார். மேலும் மின்சாரம் பாய்ந்து மாணிக்கமும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணிக்கம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கலாமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கலாமணிக்கு மணிமேகலை என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். மாணிக்கத்திற்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். 11 கே.வி மின் பாதையில் எந்தவித மின்தடை பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், மின்சாரம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்யாமல், வேலை செய்ய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால் தான் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.