
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு அவர்களுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது. அதன்படி பாகிஸ்தானியர்களுக்கு விசா உள்ளிட்டவைகளை இந்தியா நிறுத்தியதோடு சிந்து நதிநீரையும் நிறுத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.
இந்த தாக்குதலின் எதிரொலியாக இனி பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு தரப்பு தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடையாது என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். அதோடு பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்று பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதற்காக இந்திய வராது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அதோடு பாகிஸ்தான் மோதும் போட்டிகளை மட்டும் துபாய் அல்லது இலங்கையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை குல் பெரோசா பேசியுள்ளார். அவர் எங்களுக்கு இந்தியாவுடன் விளையாடுவதில் எந்தவிதமான விருப்பமும் கிடையாது. அதே நேரத்தில் ஐசிசி போட்டி என்பதால் நாங்கள் துபாய் அல்லது இலங்கையில் விளையாட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் விளையாட தங்களுக்கு துளி கூட விருப்பமில்லை என்று பாகிஸ்தான் வீராங்கனை கூறியது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.