ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஹேமந்த் சர்மா என்ற வாலிபர், கசௌலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், அவர் வீட்டில் அமர்ந்து குருக்குரே (Kurkure) சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் ஒரு சிறிய துண்டு அவரது உணவுப் பாதைக்குச் செல்லாமல் மூச்சுக்குழாய்க்குள் (Windpipe) சென்று சிக்கிக் கொண்டது.

இதனால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் துடிதுடித்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகில் உள்ள சுல்தான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும் நிலைமை மிகவும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள பிரபல பி.ஜி.ஐ (PGI Chardigarh) மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஹேமந்த் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் ஒருவர் குருக்குரே சாப்பிடும் போது மூச்சுக்குழாய் அடைத்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.