உலகின் நீண்ட தூர நதி பயணம் மேற்கொள்ளும் எம்.வி  கங்கா விலாஸ் எனும் சொகுசு சுற்றுலா கப்பலை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த சுற்றுலா கப்பல் சுற்றுலா பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே உள்ளூர் மட்டுமில்லாமல் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் டைட்டானிக் கப்பலுக்கு ஈடாக நதி பயணத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் என கூறப்படுகிறது. இந்த எம்.வி  கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பற்றிய சுவாரசியமான சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

எம்வி  கங்கா விலாஸ் சொகுசு கப்பல் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்டு 27 நதிகள் வழியாக இந்தியா – வங்காளதேசம் இடையே 5 மாநிலங்களை கடந்து 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வாரணாசியில் இருந்து புறப்படும் சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக 51 நாட்களில் அசாம் மாநிலம் திப்ருகரை அடைகிறது. இதனையடுத்து 62 மீட்டர் நீளமுள்ள கங்கா விலாஸ் சொகுசு கப்பல் 36 பயணிகள் சொகுசாக தங்கும் விதமாக அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதில் 18 சூட்  ரூம்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்து விதமான வசதிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா, ஷகீப் கன்ச், அசாமின் கவுகாத்தி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக சொகுசு கப்பல் செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பலில் பயணி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மார்ச் ஒன்றாம் தேதி இந்த கப்பல் அசாம் மாநிலம் திப்ருகரை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சொகுசுகப்பலில் ஒரு முறை 36 பயணிகள் வரை பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணம் பயணிகளுக்கு புதுவிதமான  மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.