முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த் மற்றும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே கடந்த 2023 டிசம்பரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் குறித்த புதிய விவரங்களை ஸ்ரீசாந்த் வெளியிட்டுள்ளார். கம்பீர் தன்னை ‘பிக்சர்’ (Fixer) என்று அழைத்ததாக ஏற்கனவே கூறியிருந்த ஸ்ரீசாந்த், சமீபத்திய பேட்டியில், கம்பீர் தன்னை ‘தேசதுரோகி’ என்றும் வம்புக்கு இழுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போட்டியில் கம்பீருக்கு ஸ்ரீசாந்த் பவுன்சர் வீசியதைத் தொடர்ந்தே இந்த வாக்குவாதம் ஆரம்பமாகியுள்ளது. கம்பீர் முதல் பந்தை ஃபிளிக் செய்ததால், அடுத்த பந்தை தான் பவுன்சராக வீசியதாகவும், அதற்கு கம்பீர் “நீ என் கட்டுப்பாட்டில் இருக்கிறாய்” எனக் கூற, அதற்கு தான் அரசியல் ரீதியாகப் பதிலளித்ததாகவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கம்பீர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ‘பிக்சர்’ மற்றும் ‘தேசதுரோகி’ என்று வசைபாடியதாக ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு தான், “கௌதி பாய், நீங்கள் நியூஸ் படிப்பதில்லையா, கூகுள் செய்து பார்க்கக் கூடாதா? உங்கள் தகவல்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒன்றாக விளையாடிய இவ்விருவருக்கும் இடையே ஓய்வுக்குப் பின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2013-ல் ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஸ்பாட்-பிக்சிங் புகாரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிசிசிஐ அவரது வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட்ஸ் லீக் எலிமினேட்டர் போட்டியின் போது நடுவர்கள் தடுத்தபோதும், கம்பீர் தன்னைத் தொடர்ந்து பிக்சர் என்றே கூறி வந்ததாக ஸ்ரீசாந்த் தற்போதைய நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.