மும்பையில் ஒரு சிறிய பிரச்சினைக்காக வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் புதிய கார் ஒன்று ஷோரூமில் இருந்து வாங்கியுள்ளார். அந்த வாலிபரின் பெயர் ஆகாஷ். (28). இந்த வாலிபர் தன் பெற்றோருடன் காரில் மலாத் பகுதியில் உள்ள புஷ்பா பூங்கா அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று காரை முந்தி செல்ல முயன்ற நிலையில் எதிர்பாராத விதமாக லேசாக கார் மீது மோதியது.

இதனால் ஆகாஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் கூட்டாளிகள் அந்த இடத்தில் கூடி ஆகாஷை சரமாரியாக அடித்தனர். அதனை தடுக்க வந்த ஆகாஷின் தந்தையையும் அவர்கள் சரமாரியாக அடித்து தாக்கினார். தன்மகன் அடி வாங்குவதை பொறுக்க முடியாமல் அந்த தாய் அப்படியே மகன் மீது படுத்துக்கொண்டார். இருப்பினும் ஆகாஷ் உயிர் போகும் வரை அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து‌ 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்தான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.