ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை பாஜகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.

உறுதியான ஒரு வேட்பாளரை நியமித்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே அதிமுகவை இணைப்பதற்கு பாஜகவால் முடிந்த அவ்வளவு விஷயங்களையும் செய்து வருகிறோம் என்று கூறினார். பாஜக முயற்சி செய்து வருகிறது என்று கூறியதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பாஜகவுக்கு பிடி கொடுக்கவில்லை என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. அதற்கு ஏற்றார் போன்று எடப்பாடி பழனிச்சாமியும் தங்களுடைய வேட்பாளரை திரும்பப் பெற முடியாது என அண்ணாமலையிடம் கூறிவிட்டதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி தரப்பினரும் கண்டிப்பாக தேர்தலில் எங்கள் வேட்பாளர் நிற்பார் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் ஓ. பன்னீர் செல்வம் பாஜக கட்சி போட்டியிட்டால் எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார். அதோடு ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் பணிமனையில் பாஜக கட்சியின் கொடி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக பாஜகவின் ஆதரவு ஓ. பன்னீர் செல்வத்துக்கு தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் அண்ணாமலை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை காத்திருங்கள் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்போம் என்று கூறி இருக்கிறார். ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 7-ஆம் தேதி தான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள். இந்த நாள் பாஜக சார்பில் வேட்பாளர் நியமிக்க படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி 7-ம் தேதி பல அரசியல் சம்பவங்கள் அரங்கேறலாம் என கூறப்படுகிறது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.