ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். எப்படியாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருடைய மருமகன் சபரீசனை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி வைத்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதோடு சபரீசன் எதற்காக சென்றார் என்ற காரணமும் வெளிவந்துள்ளது. அதாவது ஈரோடு கிழக்கில் முதலியார்கள் மற்றும் கவுண்டர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்களாம். அதோடு சிறுபான்மையினர் வாக்குகளும் கணிசமான அளவுக்கு இருக்கிறது.

எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுவதால் முதலியார் சமூகத்தின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளாராம். இதனால்தான் சபரீசன் ஈரோடு கிழக்குக்கு சென்று மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள தங்கம் மஹாலில் வைத்து முதலியார் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் சபரீசன் மட்டுமே இடம் பெற்றதாகவும் திமுக கட்சியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் நிர்வாகிகள் யாரும் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சபரீசன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை முதல்வரிடத்தில் சென்று சொல்வதாக அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.