ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் மூத்த நிர்வாகி ஜே.டி.சி பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட்டால் நன்றாக இருக்கும். மேலும் பா.ஜ.க-வின் முடிவிற்காக காத்திருக்கின்றோம்.

அவர்கள் போட்டியிடாவிட்டால் எங்களுடைய வேட்பாளரை உடனடியாக அறிவிப்போம் என கூறியுள்ளார். இந்நிலையில் ஜே.டி.சி பிரபாகர், மூத்த நிர்வாகிகள் ஆர்.வைத்தியலிங்கம், கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெலமண்டி என்.நடராஜன் உட்பட 118 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் 117 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை மிஞ்சும் விதமாக ஒருவரை கூடுதலாக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.