முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் மீண்டும் ஒன்றும் சேர  வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கை உரியவர்களில் ஒருவராக திகழ்ந்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக கட்சியை விட்டு விலகினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்கு வருடங்கள் அதிமுக சிறப்பான ஆட்சியை கொடுத்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் நேரடியாகவே உட்கட்சி பூசல்கள் வெடித்தது. இதனால் அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு எதிர்கொண்ட தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாகவும் அதிமுக தொண்டர்களின் எண்ணமாகவும் இருக்கிறது. நம்முடைய தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றால் தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் ஈகோவை விட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் ஈகோவை விட்டுக் கொடுத்து அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அதிமுக மீண்டும் இணையும் என்று கூறியுள்ளார்.