
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சூரஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மெல்போர்னின் டிரான்ஸ்டெவ் நிறுவனம் என்பதில் அவர் பணியாற்றி வருகிறார். 2011 ஐபிஎல் வீரர் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ரன்தீவ், இரண்டு சீசன்கள் அந்த அணிக்காக விளையாடியுள்ளார். அதன் பிறகு, பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி, தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர விரும்பியபோதும், அவர் புதிய பாதையை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சென்று, விக்டோரியா பிரிமியர் கிரிக்கெட்டில் இணைந்த ரன்தீவ், டாண்டெனோங் கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடினார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான பயிற்சியில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவரை தற்காலிக நெட் பவுலராக அழைத்தது. ஆனால், கிரிக்கெட்டில் நீடிக்காமல், தனது வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கினார். குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகி தற்போதும் அதே வேலையை தான் செய்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரன்தீவ் 2010ல் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தில், விரேந்தர் சேவாக் சதம் அடிக்காமல் தடுப்பதற்காக நோ-பால் வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தாலும், இலங்கை கிரிக்கெட் வாரியமானது அவரை ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்து, சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்க வைத்தது. 2011 உலகக் கோப்பை அணியில் முதலில் தேர்வு செய்யப்படாத ரன்தீவ், பின்னர் அஞ்சலோ மெத்யூஸ் காயமடைந்ததால் இடம் பெற்றார். இப்போது, மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பயணிக்கின்ற ரன்தீவ், அவரது கிரிக்கெட் பயணத்திலிருந்து ஒரு வித்தியாசமான பாதையில் பயணிக்கிறார்.