மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு, இயக்குனர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக  புகார் வந்த நிலையில், அதேபோன்று தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த ரியாஸ் கான் மீது கேரளா நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது சொந்த ஊரான கேரளாவில் கடந்த 1994-ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானர்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவர் தமிழில் பத்ரி, கஜினி, வின்னர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர், இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு புகைப்படக் கலைஞரிடம் தன்னோட செல்போன் நம்பரை பெற்று, இரவு நேரத்தில் செல்போன் மூலம் அழைத்து தொல்லை கொடுக்கிறார்.

தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததுடன், அருவருக்கத்தக்க வகையில் அவர் பேசியதாக கூறினார். இதையடுத்து தனக்கு விருப்பம் இல்லாததால், நெருங்கி பழக தயாராக இருக்கும் தோழிகளை தனக்கு அறிமுக செய்யும்படி அவர் கேட்டதாக கூறினார். அதோடு இவர்  போன்ற நபர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் மீ டூ சர்ச்சை வெடித்த போது, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திரைப்பட இயக்குனர் முதல் காவல் ஆய்வாளர் வரை 14 பேர் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடிகை, தற்போது ரியாஸ் கான் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ரியாஸ் கான் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கபடவில்லை.