இந்திய அணியின் வெற்றி பெற்ற நிலையில், பின் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கிவீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், சுப்மன் கில் (208) அபாரமாக இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பினாலும் மறுபுறம் பிரேஸ்வெல் (140) சதம் அடித்து வெற்றியை நெருங்கினார். எனினும், இந்திய பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு இறுதியில் கட்டுப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டிக்குப் பிறகு கில் மற்றும் பந்துவீச்சாளர்களை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார்.

இந்நிலையில் வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா கூறியதாவது, பிரேஸ்வெல்லின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்றது. இருப்பினும், நாங்கள் நன்றாக பந்துவீசினால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதும், பந்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், வெற்றி பெறுவது கடினம் என்பதும் எங்களுக்கு தெரியும். துரதிஷ்டவசமாக ஆட்டத்தில் சிறிது நேரம் அது நடந்தது.

நான் எதிர்பார்த்தது போல் விஷயங்கள் இல்லை.ஆனால், பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் நன்றாகப் போராடினர். ஆனால் முக்கியமான நேரத்தில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக மீட்டு அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர்.சுப்மான் கில்லின் இரட்டை சதம் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக நன்றாக விளையாடினார். அவர் சிறந்த வடிவத்தில் இருக்கிறார். அதுவே இலங்கை தொடரில் அவருக்கு ஆதரவளிக்க முக்கிய காரணம்.

கில் சுதந்திரமாக பேட்டிங் செய்யும் விதம் சூப்பர். சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சால் கவர்ந்தார். கடந்த காலங்களில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம்.தற்போது ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது திட்டங்களுக்கு ஏற்ப பந்துகளை வீசி முடிவுகளை பெறுகிறார்” என்று கூறினார்.