ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா இயற்கை எழில் நிறைந்த பகுதியாகவும், வட மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே போன்று பருவமழை காலங்களில் அதிக மழை பெய்யும் பகுதியாகவும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைந்து விடுகிறது.
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் நிலச்சரிவு ,வெள்ளம் போன்ற பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பல நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அந்த பகுதியில் மேக வெடிப்புகளும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
மழை நேரத்தில் ஏற்படும் மின்சார கசிவினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் இதுவரை 105 பேர் மழைக்கு இறையாகினர். இதில் 61 பேர் மழையினால் ஏற்பட்ட அழிவுகளாலும், 44 பேர் சாலை விபத்துகளாலும் உயிரிழந்தனர்.
இதனால் 78 கோடிக்கும் மேலாக சேதம் ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மண்டி மாவட்டத்தில் 10 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் தோட்டப் பயிர்களில் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு என அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
