இந்தியா மற்றும் சீனா இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை இருந்த நிலையில் டெம்சோக் மற்றும் ‌டெப்சாங் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை நிறுத்தியது. சமீபத்தில் தான் எல்லை பிரச்சினை முடிவடைந்த நிலையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் ராணுவ வீரர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்தியா சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை வைக்கப்பட்டது. இருநாட்டு ராணுவமும் வீரர்களை திரும்ப பெற்றபோது இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்த சம்பவம் நடந்து இன்னும் ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் லடாக் பகுதிகளை சீனா தங்கள் மாவட்டங்களாக அறிவித்துள்ளது. அதாவது லடாக் பகுதிகளை இணைத்து ஹோடன் பகுதியில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று இந்தியா தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சட்ட விரோதமாக இந்தியாவில் சீனா ஆக்கிரமித்துக் கொண்ட பகுதிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா புதிதாக இரண்டு மாவட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அது இந்தியாவின் எல்லைக்குள் இருக்கிறது. இந்த பிரதேசங்கள் லடாக்கில் இருக்கும்போது அதனை சீனா மாவட்டங்கள் என்று அறிவித்தது சட்டவிரோதம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டுவதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக இந்தியா தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.