பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் அல்ல. மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தான்.

ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹோல் தாலுகாவிற்கு உட்பட்ட ஷெட்பால் கிராமத்தில்  மக்கள் பாம்புகளோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த வினோத பழக்கம் கிராமத்தில் பல காலமாக இருந்து வருகிறது. பாம்புகளுக்கு உணவு அளிப்பது, பாம்புகளுடன் விளையாடுவது மட்டுமின்றி வீடுகளில் அவற்றிற்கென்று தனி இடமும் உண்டு. கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பாம்புகளுக்கு பயப்படுவதில்லை. பாம்புகள் இந்த கிராமத்தில் சுதந்திரமாக சுற்றுகின்றன .கிராமவாசிகள் யாரும் அதை துன்புறுத்துவது கிடையாது.