தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகத்திற்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் நகரச் செயலாளர் பசுபதி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் வேட்பாளர் தேர்விலும், கட்சிப் பதவிகளிலும் சி.வி. சண்முகம் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், தனது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் பசுபதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தன்னைப் போலவே இன்னும் பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் அதிமுகவிலிருந்து வெளியேறுவார்கள் என்றும் பசுபதி கூறியுள்ளது விழுப்புரம் மாவட்ட அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.