
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒருவர் அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவர் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதால் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது அதிகாரியின் 14 வயது மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முகமது சுகி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிறுமியை சந்திக்க அடிக்கடி கூடங்குளத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
அப்போது தங்களுக்கு அவசர தேவை உள்ளது. உனது வீட்டில் இருக்கும் நகையை எடுத்து தா. ஓரிரு மாதங்களில் அதை திருப்பி தந்து விடுகிறோம் என கூறியுள்ளனர். இதனை நம்பி சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மொத்தம் 32 பவுன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் முகமது சுகி, அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் கைது செய்து நகைகள் குறித்து கேட்டபோது 32 பவுன் தங்க நகைகளையும் விற்று செலவு செய்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.