
18 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்களை அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி சொந்த மண்ணில் csk வை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது.
இந்த நிலையில் ஹாட்ரிக் தோல்வி குறித்து சிஎஸ்கே பிளமிங் கூறுகையில்,” டெல்லி கேப்பிடலுக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காகத்தான் கான்வேயை கொண்டு வந்தோம். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. திரிபாதி நல்ல ரிசல்ட் தரவில்லை என்பதால் நேற்றைய போட்டியில் அணி சேர்க்கையில் மாற்றங்களை செய்தோம். ஆனால் அதுவும் பலன் கொடுக்கவில்லை. முதல் வரிசையில் வீரர்கள் சிறப்பாக ஆடினால் தான் பின்வரிசை வீரர்களை தேவையான இடத்தில் இறக்க முடியும். இந்த பேட்டிங் ஆடர் மீது எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.