கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தெருநாய்களை வளர்க்க மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. நாய்கள் பெருகுவதை கட்டுப்படுத்துவதற்காக ஒரு வீட்டிற்கு 2 நாய்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்று வளர்க்க வேண்டும் என திருவனந்தபுரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தால் அது பக்கத்து வீட்டுக்காரர்களை தொந்தரவு செய்யும் என்பதால், 2-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்க்க கூடாது என ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒருவேளை இரண்டுக்கும் மேற்பட்ட நாய்கள் வளர்க்க விரும்பினால் அவர்கள் மாநகராட்சியிடம் மனு கொடுத்து முறையான அனுமதி பெற வேண்டும். மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட நாய்களை வளர்க்க விரும்புபவர்கள் ஒரு வருடத்திற்கு மாநகராட்சிக்கு ரூ. 500, ரூ. 750, ரூ. 1000 கட்டணம் செலுத்தி வளர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.