
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல், ப்ளிங்கிட் (Blinkit) என்ற குவிக் காமர்ஸ் செயலியுடன் இணைந்து, 16 நகரங்களில் “10 நிமிடங்களில் சிம் கார்டு டெலிவரி” சேவையை தொடங்கியிருந்தது. ஆனாலும், இந்த சேவையில் ஆதார் அடிப்படையிலான KYC செயல்முறை சரியாக பின்பற்றப்படவில்லை என தொலைதொடர்பு துறை (DoT) சந்தேகம் வெளியிட்டதை அடுத்து, இந்த சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் புதிய சிம் ஆர்டர் செய்தபோது, ஆன்லைன் வழியில் வீடியோ கையேட்டின் உதவியுடன் அவர் தானாகவே KYC செயல்முறையை மேற்கொண்டு சிம்மை இயக்க முடியும் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை முறையானதா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது, ப்ளிங்கிட் செயலியில் ஏர்டெல் சிம் தேடும்போது எந்தவிதமான முடிவும் கிடைப்பதில்லை. இது சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த தடை நிலை நிரந்தரமா அல்லது மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகப்படவில்லை.
ஏர்டெல் நிறுவனம், DoT-க்கு உரிய விளக்கம் அளித்து KYC செயல்முறையை சீர்திருத்தி மீண்டும் சேவையை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஏர்டெல் செயலியின் வழியாக சிம் ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு, ஏர்டெல் ஊழியர் நேரில் சென்று சிம் செயல்படுத்தும் நடைமுறை மட்டுமே செயலிலுள்ளது.