நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் அடங்கிய இந்திய கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக எம்.பியுமான அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து அவர் இந்திய குடியுரிமையை பெற்றார் என குற்றம் சாட்டினர்.
1980 ஆம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது வாக்குச்சாவடி 145 இல் வரிசை எண் 388 சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது. இது முழுக்க முழுக்க சட்ட விதிமீறல். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும். அதற்கான தகுதியும் உண்டு.
இதனையடுத்து 1982 ஆம் ஆண்டு அவரது பெயர் நீக்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி சோனியா இந்திய குடியுரிமையை பெற்றார். குடியுரிமை இல்லாத நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் இரண்டாவது முறையாக அவரது பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ராஜீவை திருமணம் செய்த பிறகு இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆனது? இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லை என்றால் வேறு என்ன என பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
