இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டி20 உலக கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணைக் கோப்பனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக விளையாடுவதால் அவர் மீது பல சர்ச்சைகள் மற்றும் புகார்கள் எழுந்தது. காயங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த பிறகு முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் இந்திய அணியில் விளையாட முடியும். ஆனால் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்த உடன் நேரடியாக இந்தியா அணிக்குள் வருகிறார்.

இப்படி நடக்கக்கூடாது. ஏனெனில் இது மற்ற வீரர்களுக்கும் தவறான முன் உதாரணமாக மாறிவிடும். உலகக்கோப்பை போன்ற தொடரில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வீரரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒருவர் மட்டும் ஸ்பெஷலா நடத்தப்பட்டால் அது அணியின் சூழலை பாதிக்கும். எனவே ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் புதுமுக வீரர் என யாராக இருந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இருப்பினும் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதால்தான் அவரை துணை கேப்டனாக நியமித்துள்ளனர் என்பது தெரிகிறது. இருப்பினும் துணை கேப்டனாக இருப்பதற்கு ஜஸ்பிரித் பும்ராவுக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. மேலும் துணை கேப்டன் பதவிக்கு என்னை பொருத்தவரை பும்ரா மோசமான ஒரு தேர்வாக இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.