
அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தபின், வேலை மற்றும் ஹெச்-1பி விசா இழப்பால் இந்தியா திரும்பிய ஒருவர், தாய்நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை தர குறைவுகளை சுட்டிக்காட்டி எழுதிய ரெட்டிட் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தியாவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன, தூசி நிறைந்த காற்றால் சுவாசிக்க முடியாத நிலை, பொதுமக்கள் பொறுப்பின்றி நடந்து கொள்கின்றனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார். டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வாழ்ந்த அனுபவத்தை பகிர்ந்த அவர், “நான் இங்கே வாழ்ந்து கொண்டு இறந்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவில், “நடந்து செல்ல முடியாத சாலைகள், முடிவில்லா கட்டுமானப் பணிகள், காற்றில் தூசித்துகள், பொதுமக்களின் மரியாதையற்ற நடத்தைகள்” என குறை கூறியுள்ளார். மேலும் , “நகரங்களில் மக்கள் மிருகங்களைப் போல வாகனம் ஓட்டுகிறார்கள், சுவர்களில் சிறுநீர், சாலைகளில் குப்பைகள்” என பதிவிட்டு கோபத்தை வெளிபடுத்தியுள்ளார்.
இந்தக் கருத்துகள் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளன. பலர் இந்தப் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சிலர் அவரின் பார்வை பெருமைப்பட்டதென்றும், நாட்டு எதிர்ப்பு மனப்பான்மை காட்டுவதாகவும் விமர்சித்துள்ளனர்.
அதற்கு கமென்ட் செய்த ஒருவர், “நான் 2.5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தேன். வாழ்வதற்கான சூழல் மோசமானது என்பதே உண்மை. ஆனால், நாம் இங்கே வாழ விரும்பினால், இந்த சவால்களை ஏற்கவேண்டும்” என்றார்.
மற்றொரு பயனர், “இந்தியாவுக்கு எதிராக இவ்வளவு கோபம் வைத்திருந்தால், அமெரிக்காவிலேயே இருந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.