இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் படி அரசியல் கட்சிகளின் வருவாய் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த வகையில் தற்போதும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வருவாய் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 8 தேசிய கட்சிகளில் மத்தியில் ஆளும் பாஜக தான் பணக்கார கட்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

இந்த கட்சி கடந்த வருடத்தை காட்டிலும் 633% அதிகமாக வருவாய் ஈட்டி உள்ளது. இதேபோன்று பாஜக கட்சி கடந்த வருடத்தை காட்டிலும் 155 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த வருடம் பாஜக கட்சி ரூ. 1917 கோடியும் அதற்கு முந்தைய வருடத்தில் ரூ. 752 கோடியும் வருவாயாக ஈட்டியுள்ளது. ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதற்கு முந்தைய ஆண்டில் வெறும் ரூ. 74 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாநில கட்சிகளில் திமுக கட்சி தான் பணக்கார கட்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. திமுக கட்சி ரூ. 318.75 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் இருக்கிறது.