தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இல்லாத மருத்துவர்களின் விவரங்கள் பயோமெட்ரிக் மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியேற்றுள்ளது. சமீபத்தில் குறித்த நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் மருந்தாளர் உள்ளிட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்ட நிலையில் தற்போது இது தொடர்பான உத்தரவை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் செவிலியர்கள் தான் சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மாலை நேரத்திலும் மருத்துவர்கள் பணியில் உள்ளதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இல்லாதது மற்றும் மருந்துகள் கையிருப்பு இல்லாதது தொடர்பாக 104 என்ற மருத்துவ சேவை மையத்தில் புகார் தெரிவிக்கலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிப்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.