
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதோடு 48 நாட்கள் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை விரதம் இருக்கப் போவதாகவும் பிப்ரவரி மாதம் அறுபடை வீடுகளுக்கு செல்ல போவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தற்போது திமுக கட்சியின் அமைப்புசெயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் முதலில் அண்ணா பல்கலைக்கழகம் யாருடைய தலைமையின் கீழ் இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
துணைவேந்தர் அனுமதி இல்லாமல் யாரும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் காவல்துறை குற்றவாளியை கைது செய்துள்ள நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாதுகாப்பு இல்லை எனில் அதற்கு யார் பொறுப்பேற்க முடியும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதோடு கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று பொய் கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
திமுக ஆட்சி அனைவருக்கும் பாதுகாப்பான அரசு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. இது வேடிக்கையானது. பகுத்தறிவாளர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொதுமக்கள் அண்ணாமலை போராட்டத்தை பார்த்து சிரிக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு தினசரி அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும். மேலும் அண்ணாமலை காலம் முழுவதும் காலணியே அணிய முடியாது என்று கூறினார்