தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் பாலிவுட் மற்றும் பிற மொழி படங்களிலும் இசையமைப்பாளராக இருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனார் படத்திற்காக ஏ.ஆர் ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி அமெரிக்காவில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆஸ்கர் விருது பெற்ற அனுபவத்தை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று அவற்றை என்னுடைய பையில் வைத்து  இந்தியாவுக்கு கொண்டு வந்தேன்.

அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பில் இருந்தவர் என்னை காத்திருக்குமாறு கூறினார். என்னைப் போன்று 100 பேர் காத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அதன்பிறகு என் பையில் வைத்திருந்த ஆஸ்கர் விருதுகளை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனதோடு கைதட்டினர். என்னுடைய பெயரை ஆஸ்கர் விருதுக்கு அறிவித்த போது நான் மிகவும் வியந்து போனேன். இது கனவா இல்லை நனவா என்று நினைத்தேன். எல்லா புகழும் இறைவனுக்கு மட்டுமே. மேலும் நான் இரண்டாவது முறை ஆஸ்கர் விருதை வென்ற போது அன்பும் இருந்தது வெறுப்பும் இருந்தது. நான் அன்பை மட்டுமே தேர்வு செய்தேன் என்று கூறியுள்ளார்