ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது மிகப்பெரிய ஸ்கோரை உருவாக்கி வரலாறு படைத்தது..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி  வரலாறு படைத்தது மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

இதனால் இந்திய அணி தனது 10 வருட சாதனையை முறியடித்துள்ளது. முன்னதாக 2013ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4வது அதிகபட்ச ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோரை அடித்த சாதனை இங்கிலாந்து பெயரில் உள்ளது. 2018-ல் நாட்டிங்ஹாமில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இந்தப் போட்டியை எந்த ரசிகராலும் மறக்க முடியாது. 2006ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 438 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை அடித்ததன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா 3வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ல்) செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 416 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தொடர்ந்து இரண்டு வித்தியாசமான ஸ்கோருடன் டாப்-5 பட்டியலை நிறைவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் :

481/6 – இங்கிலாந்து, நாட்டிங்ஹாம்ஷயர், 2018

438/9 – தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், 2006

416/5 – தென்னாப்பிரிக்கா, செஞ்சுரியன், 2023

399/5 – இந்தியா, இந்தூர், 2023

383/6 – இந்தியா, பெங்களூரு, 2013

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக, சுப்மன் கில் (104), ஷ்ரேயாஸ் ஐயர் (105) ஆகியோர் சிறப்பான சதங்களை அடித்தனர். மேலும் கேப்டன் கே.எல்.ராகுல் (52), சூர்யகுமார் யாதவ் (72*) சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி அணியை சாதனை ஸ்கோருக்கு (399 ரன்கள்) அழைத்துச் சென்றனர். பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு பின், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ஓவருக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது..

ஆனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சீன் அபோட் 54 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.