தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் ஆளுநரை சந்தித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார். அதோடு பெஞ்சல் புயலில் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுக்கப்படுவது வழக்கம்.

இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. இந்த தேநீர் விருந்தை ஏற்கனவே ஆளுநருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் மதிமுக உள்ளிட கட்சிகள் புறக்கணித்துள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விஜய் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.