நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி தொடர்பாக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆரணி தொகுதி நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கடந்த தேர்தலை போல இந்த முறை காங்கிரசுக்கு ஆரணியை ஒதுக்கக்கூடாது என அந்த தொகுதி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுகவை தவிர யாருக்கும் கொடுக்கக் கூடாது, கடந்த முறை ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தின் செயல்பாடு சரியாக திருப்திகரமாக இல்லை என புகார் தெரிவித்தனர். வரும் தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், திமுகவுக்கு கொடுத்தால் உற்சாகமாக வேலை பார்ப்போம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் யாரை நிறுத்தினாலும் கருத்து வேறுபாடுகளின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு அறிவுரை வழங்கியுள்ளது.