இந்திய இராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச அளவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி நடவடிக்கையாக இந்த தாக்குதல் இடம்பெற்றது. இதையடுத்து, IPL மற்றும் PSL தொடர்களில் பங்கேற்கும் நியூசிலாந்து வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (NZC) உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான தகவல்களை நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம். எங்கள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கு தேவையான சமீபத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அதில் பங்களாதேஷில் உள்ள நியூசிலாந்து A அணி, IPL மற்றும் PSL போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் உள்ளடக்கப்படுவதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலைகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்காக நியூசிலாந்து அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால், வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்து IPL மற்றும் PSL அமைப்பாளர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தற்போது வரை எந்தவொரு வீரரும் போட்டியில் இருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.