ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விலகுகிறார்.

டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் அடுத்த ஆட்டம் புதன்கிழமை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. டெல்லி சென்ற இந்திய அணியில் சுப்மன் கில் இல்லை.

நேற்று பிற்பகல் கில்லின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. அதில், “2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தை தவறவிட்ட தொடக்க வீரர் சுப்மன் கில், அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அணியின் அடுத்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், அக்டோபர் 9, 2023 அன்று (நேற்று) அணியுடன் டெல்லிக்கு செல்ல மாட்டார் என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 வயதான கில் சென்னையில் தங்கி பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை பெறுவார்.

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் இல்லாத நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷான் இன்னிங்ஸைத் தொடங்கினார்.கில் டெங்குவில் இருந்து குணமடைந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் வந்துள்ளன, ஆனால் அவரது பாதிப்பின் தன்மை குறித்து பிசிசிஐயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா :

ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை முதல் போட்டியில் 199 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 200 ரன்களை துரத்திய இந்தியா 2 ஓவரில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. ரோகித் சர்மா, இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.